சென்னையில் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை அளித்த அனைத்து மகளிர் போலீசார்

அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், தொடர்பு செயலிகள், எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள மொத்தம் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மூலம் சிறுவர் நலக்காவல் பிரிவு1 மற்றும் 2 மற்றும் அவர்களது குழுவினருடன் அம்மா ரோந்து வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னை பெண்கள் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் சென்னையில் உள்ள அந்தந்த காவல் எல்லையில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று சுமார் 350க்கும் மேற்பட்ட முதியோர்களை சந்தித்தனர்.

 

அவர்களது உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தனர். மேலும் அவர்களது ஆரோக்கியத்திற்காக மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளவும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கினர். தற்போதைய சூழ்நிலைக்கேற்றபடி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அடிக்கடி சூப் மற்றும் சூடான குடிநீர் பருகும்படி ஆலோசனைகளை வழங்கினர். மேலும் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பாதுகாப்புக்காக சானிடைசர் பயன்படுத்துமாறும் அடிக்கடி கைகழுவுமாறும் அன்போடு தெரிவித்தனர். தனித்திருத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது குறைகளை கேட்டறிந்து தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்யப்பட்டது.

மேலும் அம்மா ரோந்து வாகனம் மூலம் குழந்தைகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை மகளிர் போலீசார் சந்தித்தனர். அவர்களது எதிர்கால நலன் கருதி விழிப்புடன் இருக்கவும், இணையவழி கல்வி பயிலும் போது இடையிடையே தோன்றும் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது எனவும் பாதுகாப்பாக இணைய வழி பயன்பாட்டினை பயன்படுத்தும்படியும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் யாருடனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்றும் தகுந்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் கணினிகளை பயன்படுத்தவும் காப்பக பொறுப்பாளருக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள். குழந்தைகளை இணையவழி குற்றங்களிலிருந்து பாதுகாக்க கண்காணிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தினர். மேலும் இணையதள பயன்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அவசர உதவி எண்களான 1098 மற்றும் 100, பெண்களுக்கான சிறப்பு உதவி எண்களான 1091, 181 மற்றும் 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளுமாறும் மேலும் காவலன் SOS செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Translate »
error: Content is protected !!