அவரும் இதை தான் செய்தார்…! சசிகலாவின் முடிவு.. எடப்பாடி ரூட் கிளியர்….

சென்னை,

தீவிர அரசியலில் ஈடுபடாமலே.. தொண்டர்களை சந்திக்காமலே.. தீவிர அரசியலில் இருந்து விலகியது இரண்டே பேர்தான். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் சசிகலா..! இந்த இரண்டு பேரின் விலகல் முடிவும் ஒரு வகையில் அதிமுகவிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக சென்றுள்ளது.

நேற்று இரவு 9.15 மணி இருக்கும். திமுக, அதிமுக தங்களின் தேர்தல் கூட்டணிகளை எப்படி அமைக்கும், யாருக்கு எவ்வளவு இடம் ஒதுக்கும் என்று பலரும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்து கொண்டு இருந்த நேரம்.. திடீர் என்று அந்த அறிக்கை வெளியானது. சசிகலாவின் அரசியலில் இருந்து விலகும் அறிக்கை அது.

யாருமே எதிர்பார்க்காமல், தமிழக அரசியலில் புயலை கிளப்புவார் என்று கருதப்பட்ட சசிகலா தீவிர அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். தமிழக அரசியல் எப்போதுமே பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பரபரப்பாக இருக்கும். அந்த பரபரப்பு இந்த வருடமும் நேற்றைய அறிக்கை மூலம் உருவாகிவிட்டது.

திமுக, அதிமுக, அமமுக என்று யாருமே சசிகலாவின் இந்த முடிவை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். சசிகலாவின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அவரை சமாதானம் செய்ய முயன்றேன், ஆனால் அவரிடம் 30 நிமிடம் பேசியும் என் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தினகரன் மனமுடைந்து சொல்லும் அளவிற்கு சசிகலாவின் இந்த முடிவு சர்ப்ரைஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக அமைந்துள்ளது.

சசிகலாவின் இந்த முடிவு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரே ஒரு நபருக்குத்தான் ஆதரவாக சென்றுள்ளது. அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் சசிகலாவின் இந்த அறிவிப்பு எடப்படியாருக்கு மிகப்பெரிய நல்ல செய்தியாக சென்றுள்ளது. அதிமுக இனி எந்த கவலையும் இன்றி தேர்தலை எதிர்கொள்ள முடியும், அமமுக பற்றி பெரிதாக கவலைப்படாமல் திமுக மீது மட்டும் இனி இபிஎஸ் கவனம் செலுத்த முடியும்.

சசிகலா இந்த தேர்தலின் போது ஆக்டிவாக இருந்தால் அது அமமுகவிற்கு பலம் சேர்க்கும். அமமுக தேர்தலில் நன்றாக செயல்படும்பட்சத்தில் அது அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும். அதிமுகவிற்கு பெரிய சரிவை இது கொடுக்கும். அதிமுகவிற்கு செல்லும் வாக்குகள் அதிமுகஅமமுக என்று இரண்டாக பிரியும். இதைத்தான் தற்போது சசிகலா தனது அறிவிப்பின் மூலம் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

அதிமுகவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று கூறி அதிமுகவிற்கு சசிகலா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அமமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அதிமுகவிற்கு இப்படி சசிகலா சப்போர்ட் செய்தததை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இதனால் கண்டிப்பாக இந்த தேர்தலில் அமமுக பிரிக்க வாய்ப்பு இருந்த பல வாக்குகள் அதிமுகவிற்கே சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சசிகலா வருவார். கட்சியை கைப்பற்றுவார் என்று நம்பிக்கையோடு இருந்த திமுகவிற்கும் இது மிகப்பெரிய இடியாக வந்துள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று இனியும் நம்பாமல் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. ஒரே ஒரு அறிக்கையின் மூலம் திமுகவிற்கு அதிர்ச்சியையும், அதிமுகவிற்கு இன்ப அதிர்ச்சியையும் சசிகலா ஒரு சேர கொடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் முதல்வர் பழனிசாமியை அதிர்ஷ்டசாலி என்று கூறுவார்கள். அது மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது. முதலில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தது. ரஜினிகாந்த் வந்தால் அதிமுகபாஜக கூட்டணி உடையும், ரஜினிதான் பாஜக கூட்டணியின் தலைவராக இருப்பார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தீவிர அரசியலுக்கு வரும் முன்பே அரசியலில் இருந்து விலகுவதாக ரஜினி அறிவித்துவிட்டார்.

இதனால் பாஜகஅதிமுக கூட்டணியில் எடப்பாடியாரின் வாய்ஸ் கூடுதல் பலம் பெற்றது. ரஜினி தேவையில்லை, இபிஎஸ் போதும் என்ற நிலைக்கு பாஜக சென்றது. தற்போது சசிகலாவும் விலகிவிட்டதால் மொத்தமாக இபிஎஸ் ரூட் கிளியர் ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா கூறியது போல எடப்பாடியருக்கும் எதிரிகள், போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

தற்போது அதிமுக கூட்டணிக்கு இருக்கும் ஒரே போட்டி திமுக என்று மாறியுள்ளது. இபிஎஸ் சமாளிக்க வேண்டிய பெரிய சக்தி ஸ்டாலின் மட்டும்தான். இதனால் அதிமுக vs திமுக என்ற பாரம்பரிய தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இன்னும் 30 நாட்களில் பல நூறு டிவிஸ்ட்கள் நடக்கும் என்பதால் தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்று இருக்கிறது.

Translate »
error: Content is protected !!