அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் அடுத்த வாரம் இந்தியா வருவார் என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது..
ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு லாயிட் ஆஸ்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லாயிட் ஆஸ்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் போது 3 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்தித்து சர்வதேச பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதோடு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ–பசுபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாயிட் ஆஸ்டின் எந்த தேதியில் இந்தியா வருகிறார் என்பதை பென்டகன் அறிவிக்கவில்லை. எனினும் அவர் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தனது பயணத்தின் இறுதியாக இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் லாயிட் ஆஸ்டின், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த தேசிய பாதுகாப்பு தலைவர்களை சந்தித்து அமெரிக்க–இந்திய ராணுவ கூட்டாட்சியை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பார் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.