சென்னை, ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது.
சென்னை, ஓட்டேரி, சந்தியப்பன் 5வது தெருவில் வசித்து வருபவர் பொன்னம்மாள் (37). இவருக்கு பழனி என்ற வாய் பேசமுடியாத 5 வயது மகன் உள்ளான். நேற்று பொன்னம்மாள் காலை, 9 மணியளவில் ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சந்தைக்கடை மார்க்கெட்டிற்கு சென்றார். அப்பொழுது கூட்ட நெரிசலில் குழந்தை பழனி காணாமல் போய் விட்டார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், பொன்னம்மாள் உடனே தலைமைச் செயலக காலனி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி தலைமையில் தனிப்படை போலீசார் குழந்தையை கண்டுபிடிப்பதில் தீவிரமாக களம் இறங்கினர்.
ஆட்டோ நிறுத்தம், பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி குழந்தையை தேடிவந்தனர். இந்நிலையில் ஓட்டேரி, வரதம்மாள் கார்டன் 2வது தெருவிலுள்ள மைதானம் அருகில் குழந்தை பழனியை பத்திரமாக மீட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் குழந்தைக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி, பெற்றோருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி, குழந்தை பழனியை பெற்றோர் வசம் பத்திரிமாக ஒப்படைத்தனர். காணாமல் போன குழந்தையை தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரிமாக மீட்ட தலைமைச் செயலக காலனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்டோரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.