இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அலரி சந்தித்தார். மருந்து உற்பத்தித்துறையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு, அப்போது ராஜபக்சே கோரிக்கை விடுத்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்திய அரசால் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
கடந்த மாதம் பிரதமர் ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இணையவழி கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது இரு தலைவர்களும் ஆலோசனை நடத்திய விஷயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதே, இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி நிலையங்களுக்கு சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் கட்டுவது, கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய திட்டம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து பணியாற்றுவது குறித்து, இந்திய தூதர் விவரித்தார்.
பாதுகாப்பற்ற குடிநீரால் இலங்கையில் சிறுநீரக நோயால் பலர் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாட்டின் சில பகுதிகளில் பாதுகாப்பான குடிநீருக்கு பற்றாக்குறை இருப்பது கவலை அளிப்பதாக சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதர், பிரதமர் மோடியின் ஜல் ஜீவன் மிஷன் (Water for Life Mission) திட்டத்தின் கீழ் இதற்கான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியம் குறித்து விளக்கினார்.
அத்துடன் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு, இந்திய தூதரிடம் பிரதமர் மகிந்த கோரிக்கை விடுத்தார்.