நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த சனிக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் பயனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஒரு காலவரையறைக்கு 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 14 முதல் 16ம் தேதி வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் குறைவாகவே உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.