தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. நிலைமை சமாளிக்க சென்னை மாநகராட்சி எடுத்த அதிமுக்கிய முடிவு…!

சென்னை,

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் 2123 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி தொடர் தீவிர சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்குப் பெரிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் நல்ல நிலையிலுள்ள நோயாளிகளுக்குச் சிறிய மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்கச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதேநேரம் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அம்பேத்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றில் 11,775 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 1618 படுக்கைகளில் 650 படுக்கைகள் நிரம்பியுள்ளன. சென்னையிலுள்ள 5 அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாகவே மூன்று அடுக்கு சிகிச்சை முறையைப் பின்பற்றச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!