தமிழகத்தில் கோரோனோ தடுப்பூசி பற்றாகுறையா..? அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்..!

சென்னை,

தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடாமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா மீண்டும் 2-வது இடத்துக்கு போய்விட்டது. நாள்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்குகள் என பல மாநிலங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடப்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தமிழக அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இருப்பினும் பல இடங்களில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் திருப்பி அனுப்பிவிடப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் பொதுவாக கோவாக்சின் தடுப்பூசியைத்தான் பொதுமக்கள் போடுவதை விரும்புகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 நாட்களுக்காவது உடல் அசதியாக இருக்கிறது என்பதால் அதை யாரும் விரும்பவில்லை. ஆனால் சில மருத்துவமனைகளில் கோவிஷீல்டுதான் இருப்பு இருப்பதாகவும் அது மட்டுமே போட முடியும் என்றும் கூறுகின்றனராம். இதனால் கோவிஷீல்டை வேறுவழியே இல்லாமல் பொதுமக்கள் போடுகிற நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

கோவாக்சின் மட்டுமே போட முடியும் என்பவர்கள் மருத்துவமனைகளுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கும் நிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கும்பகோணம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் கூட கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவை எதிர்க்கும் மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசியை மத்திய அரசு அனுப்புவது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்யக் கூடாது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். தற்போது தமிழகமும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.

 

Translate »
error: Content is protected !!