துரைமுருகன் வீட்டை தொடர்ந்து பள்ளி தாளாளர் பண்ணை வீட்டிலும் கொள்ளை முயற்சி. நகை, பணம் இல்லாததால் ‘ஒரு 100 ரூபாய் கூட வைக்கமாட்ட’ என எழுதிவைத்துள்ளனர்..
ஏலகிரி மலையில் துரைமுருகன் பண்ணை வீட்டை தொடர்ந்து பள்ளி தாளாளர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. நகை, பணம் இல்லாததால் ஒரு 100 ரூபாய்கூட வைக்கமாட்ட என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா மையமாக உள்ளது. இங்குள்ள மஞ்சம்கொள்ளை புதுார் கிராமத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு 3 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கை மட்டும் திருடி சென்றனர்.
அதைத்தொடர்ந்து தொடர்ந்து டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமி, நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார், கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு வீட்டில் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ள பகுதியில் வாணியம்பாடியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய சென்றனர்.
அங்கு கீழ்தளத்தில் காவலுக்காக கணவன், மனைவி இருவர் இருந்தனர். முதல் தளத்தில் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது கொள்ளையர்கள் அங்கும் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அங்கும் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் ஆத்திரத்தில் அங்கிருந்த டி.வி.யை உடைத்துள்ளனர். பின்னர் அங்கேயே அமர்ந்து விலை உயர்ந்த மது அருந்தியுள்ளனர்.
ஒரு 100 ரூபாய் வைக்கமாட்ட பின்னர் அங்கிருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து சுவற்றில் ‘ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்ட’ என எழுதியுள்ளனர். மேலும் நோட்டு புத்தகத்தில் ‘ஒரு ரூபாய் கூட இல்ல… எடுக்கல’ என எழுதி வைத்துள்ளனர்.
இது குறித்து எந்த புகாரும் இதுவரை அளிக்கப் படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மர்ம கும்பலை பிடிக்க பெங்களூரு, சித்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான தனிப்படையினர் விரைந்துள்ளனர்.