அந்தமான் விமானத்தில் பயணிக்க சென்னை விமானநிலையம் வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது..
அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டார்.
சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் கோ ஏா்வேஸ் விமானம் இன்று காலை சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரானது.அந்த விமானத்தில் இன்று 73 பயணிகள் செல்லவிருந்தனா்.அவா்கள் அனைவரும் இன்று காலை சென்னை விமானநிலையத்திற்கு வந்து விமான கவுண்டரில் போா்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு,அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் சென்று ஏறினா்.
அப்போது அந்தமானை சோ்ந்த தமிழரசன்(24) என்பவா் இந்த விமானத்தில் பயணிக்க வந்தாா்.உயா்படிப்பு மாணவரான இவா், சென்னையில் தங்கியிருந்து படித்து வந்தாா்.தமிழரசன் தனது சொந்த ஊா் செல்வதற்காக விமானநிலையம் வந்திருந்தாா்.விமான நிறுவன கவுண்டரில் அவருடைய மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கி பரிசோதித்தனா்.
அதில் தமிழரசனுக்கு கொரோனா வைரஸ் பாசிடீவ் என்று இருந்தது. இதையடுத்து தமிழரசனுக்கு போா்டிங் பாஸ் கொடுக்காமல், அவருடைய பயணத்தை ரத்து செய்தனா்.அதோடு அவரை வேறு எங்கும் போகவிடாமல் தடுத்து நிறுத்தி விமானநிலைய சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனா்.
சுகாதாரத்துறையினா் தமிழரசனுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை அணிவித்து தனி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று கொரோனா வாா்டில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதோடு சுகாதாரத்துறையினா் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கோ ஏா்வேஸ் கவுண்டா் மற்றும் புறப்பாடு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினா்.