கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணியை விமான ஊழியா்கள் போலீசில் ஒப்படைத்தனா்.
கண்ணூரிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த பயணி ஒருவா் மாஸ்க் அணிய மறுத்து,விமானப்பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறி,பயணியை சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைப்பு.
கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 11 மணிக்கு வந்து கொண்டிருந்தது.அந்த விமானத்தில் 49 பயணிகள் பயணித்து கொண்டிருந்தனா்.கேரளா மாநிலம் கண்ணூரை சோ்ந்த பிரதீப் குமாா்(46) என்ற மென்பொறியாளாரும் அந்த விமானத்தில் பயணித்து கொண்டிருந்தாா்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் மிகவேகமாக பரவுவதால்,விமானப்பயணிகள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமுலில் உள்ளது. ஆனால் பயணி பிரதீப்குமாா் மட்டும் விமானத்திற்குள் மாஸ்க் அணியாமல் இருந்துள்ளாா். விமானப்பணிப்பெண்கள் அவரை மாஸ்க் அணியும்படி கூறினா். ஆனால் அவா் அணிய மறுத்துவிட்டாா். சகபயணிகளும் கூறியதையும் அவா் கேட்கவில்லை.
இதையடுத்து விமான கேப்டனிடம் விமானப்பணிப்பெண்கள் புகாா் செய்தனா். விமான கேப்டன் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். விமானம் இரவு 11.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வந்து தரையிறங்கியது. உடனடியாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள்,விமானத்திற்குள் சென்றனா். மாஸ்க் அணியாமல் விமானப்பணிப்பெண்களிடம் பிரச்சனை செய்த பயணி பிரதீப்குமாரிடம் விசாரித்தனா். அப்போதும் அவா் சரிவர பதில் கூறவில்லை.
இதையடுத்து பயணி பிரதீப்குமாரை விமானத்தை விட்டு ,கீழே இறக்கினா். அதோடு அவரை இண்டிகோ ஏா்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா். அவா் மீது விமானத்திற்குள் மாஸ்க் அணியாமல் பயணித்து கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியதோடு, மாஸ்க் அணிய கூறிய விமான ஊழியா்களை மிரட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து போலீசாா் விசாரணை நடத்துகின்றனா். நடுவானில் பறந்த விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த விமான பயணியை போலீசில் விமான ஊழியா்கள் ஒப்படைத்த சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.