இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் கபில்தேவ். அவரது தலைமையிலான இந்திய அணிதான், 1983ஆம் ஆண்டில் லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியில், மேற்கு இந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி முதன்முதலில் உலகக்கோப்பையை வென்றது.
தற்போது 61 வயதாகும் கபில் தேவ், கிரிக்கெட் வர்ணனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டிருந்தார். அவருக்கு நீரிழிவு பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கபில்தேவிற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து டெல்லி போர்ட்டீஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு கபில்தேவிற்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், கபில்தேவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த தகவல் கபில்தேவ் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் உருக்கமுடன் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 1978இல், குவெட்டாவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டில் அறிமுகமான கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை வீழ்த்திய, 5,248 ரன்களையும் குவித்து சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தார்.