காமெடி நடிகர் சூரி அளித்திருந்த பண மோசடி வழக்கில், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.
அந்த நேரத்தில், சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், சம்பளம் தராததால் அதுபற்றி சூரி கேட்டுள்ளார். எனினும், அவருக்கு நிலம் விற்பனைக்கு உள்ளதாகக்கூறி, நிலத்துக்கான அட்வான்ஸ் என்ற பெயரில் சம்பள பணத்தை கழித்துள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தில் தன்னிடம் ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக சூரி தரப்பில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நடிகர் விஷ்ணு விஷால் மறுத்தார்.
இதற்கிடையே, புகாரின் அடிப்படையில் ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
ஆனால், ரமேஷ் குடவாலா செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்று கருதி, ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிகிறது.