கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே திமுக எம்எல்ஏ என்பதால், மனோ தங்கராஜூக்கு அமைச்சர் வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகளில் திமுக சார்பில் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் குளச்சலில் பிரின்ஸ், கிள்ளியூரில் ராஜேஷ்குமார், விளவங்கோடில் விஜயதரணி வெற்றி பெற்றனர். ஆனால் அப்போது அதிமுக ஆட்சியை பிடித்தது. இம்முறை திமுக ஆட்சியைபிடித்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட மனோ தங்கராஜ் மட்டுமே திமுக சார்பில் வெற்றிபெற்றுள்ளார்.
நாகர்கோவிலில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன், கன்னியாகுமரியில் போட்டியிட்ட ஆஸ்டின் ஆகியோர் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரே ஆளும்கட்சி எம்எல்ஏ மனோ தங்கராஜ் தான். எனவே, மனோ தங்கராஜ் அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். மனோ தங்கராஜ் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார்.