தமிழகத்தில், இன்று (மே 10) முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் படுகிறது. இன்று காலை, 4:00 முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
பால்,காய்கறி, மளிகை மற்றும் பத்திரிகை போன்ற அத்தியாவசிய சேவைகள், வழக்கம் போல உண்டு. .
மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க, தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்குள்ளும் இடையிலும் அரசு மற்றும் தனியார் நகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
அனைத்து உணவகங்களிலும், ‘பார்சல்‘ சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடைகள் பகல், 12:00 மணி வரை மட்டும் செயல்படலாம்; அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக, தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும், தங்கும் விடுதிகள் செயல்படலாம்
உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை
மாநிலம் முழுதும், அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் என, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை
சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும், சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட, தடை தொடர்கிறது. அதேபோல, மாவட்டங்களில் உள்ள, மொத்த வியாபார காய்கனி வளாகங்களில், சில்லரை வியாபார கடைகள் செயல்படாது
பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற, மருத்துவத் துறை சார்ந்த பணிகள்; சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்து செல்லும் வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படும்.
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், பகல், 12:00 மணி வரை செயல்படலாம். ரேஷன் கடைகள் காலை, 8:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்படும். தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குவோர், அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் சென்று வரலாம். நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கும். நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்
தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம். இவற்றில் பணியாற்றுவோர், நிறுவனம் ஏற்பாடு செய்யும் பஸ் அல்லது சொந்த வாகனங்களில், நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்லலாம்.
பள்ளி கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.திருமண நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல், இறப்பு நிகழ்வில், 20 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம். தொலைத்தொடர்பு மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு, தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளலாம்
அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். ரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்
வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள், அதிக பட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும். பள்ளி கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. நீச்சல் குளங்கள் யோகா பயிற்சி நிலையங்கள் இயங்கவும் அனுமதி இல்லை.
அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் அக்கடைகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி, வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
இளைஞர்கள் ஊர் சுற்றுவதை நிறுத்த வேண்டும். வெளியில் செல்வோர், கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பால் சுத்தம் செய்யவும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்கவும்.முழு ஊரடங்கை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், நோய் பரவலைக் குறைக்கலாம். எனவே, பொது மக்கள், அரசு உத்தரவை முழுமையாக பின்பற்றி, நோயை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.