சென்னை, அம்பத்தூரில் 20 அடி உயர மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை போலீசார் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் வேலையின்றி தவித்ததால் குடும்பம் நடத்த முடியாமல் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று (13.09.2020) இரவு 11.30 மணியளவில், அம்பத்தூர், ராக்கி திரையரங்கம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்துக்கு சென்றார். அங்குள்ள பட்டம்மாள் தெருவில் உள்ள சுமார் 20 அடி உயர மின் கம்பத்தில் ஏறினார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.
இதனைக்கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த நபர்கள் அம்பத்துார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது இரவு ரோந்துப் பணியிலிருந்த அம்பத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் குணசேகரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மின்கம்பம் அருகிலிருந்த பெரிய கட்டிடம் வழியாக சென்ற முதியவர் முருகேசன், அருகிலிருந்த மின்கம்பத்தில் தாவி அமர்ந்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமைக்காவலர் சரவணன், காவலர் பொன்செல்வன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்புப் பணியில் இறங்கிய அவர்கள் முதலில் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் முதியவர் மின் கம்பியை தொட முயற்சித்தபோது அவரை மின்சாரம் தாக்காமல் உயிர் தப்பித்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினருடன் இணைந்து முதியவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். முதியவர் முருகேசனிடம் சுமார் 1 மணி நேரம் லாவகமாக பேசினர். அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே அவரை சமாதானப்படுத்தி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கீழே இறக்கிக் கொண்டு வந்தனர். அவரை அம்பத்துார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சனை மற்றும் வேலையின்மை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக அவர் போலீசில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கி அவரது குடும்பத்தாரிடம் அவரை ஒப்படைத்தனர்.
சமயோஜிதமாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற முதியவரை காப்பாற்றிய அம்பத்துார் போலீஸ் குழுவினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.