கோவையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை பற்கொடுத்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் சூதாட்டத்தில் பணமிழந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார், வயது 28. இவர் ஆன்லைன் வாயிலாக ரம்மி சூதாட்ட விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.
இதில் பணம் கட்டுவதற்கு கடன் வாங்கி, அந்த தொகையும் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த மதன்குமார், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்துகொள்ளும் அதிகரித்திருப்பது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி, மதுரை மாவட்டம் மேலூர், சென்னை அருகே செம்பியம் ஆகிய இடங்களில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை இழந்த மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சூழலில், கோவையில் நான்காவதாக வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்தாவிட்டால், தற்கொலைகளும், அதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.