கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம், பிறந்த நாள் விழா மற்றும் மத வழிபாட்டு ஸ்தலங்களில் நடைபெறும் விழாக்கள் பெரிய அளவில் நடைபெறுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளதால் விழாக்களை பெரியளவில் வாழ்வாதாரமாக கொண்டுள்ள புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதோடு, வங்கி கடன், கடை வாடகை, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த முடியாமலும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடப்பில் உள்ள ஊரடங்கில் கடந்த சில வாரங்களாக கடைகளை திறக்க பல்வேறு நிலைகளில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள போதிலும் போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க தளர்வுகள் அளிக்காமல் இருப்பது அத்தொழிலை மட்டுமே நம்பியுள்ளோருக்கு மிகுந்த மன உளைச்சலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே கொரோனா நோய் தொற்று காரணமான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் போட்டோ ஸ்டுடியோக்களை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.