கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் யானைகள், வாகனம் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கீழ் மலை பகுதிகளான தாண்டிகுடி , பண்னைகாடு , பாச்சலூர் , அஞ்சிவீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியும் அவ்வபோது வாகனங்களை வழிமறித்தும் வந்தது. தொடர்ந்து இன்று அஞ்சி வீடு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானைகள் அப்பகுதியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.