கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்காக அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வையிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகை புரிகின்றன. நகர் பகுதியில் வாகன நிறுத்துமிடம் இல்லாததன் காரணமாக சாலையோரங்களியே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக நகரிலுள்ள வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது இதன் ஒரு பகுதியாக பல வருடங்களுக்கு முன்னர் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து துறைக்குச் சொந்தமான இடத்தினை தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்ட நிலையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் பல வருடங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது மீண்டும் வாகன நிறுத்துமிடம் அமைக்க அரசு முடிவு செய்து அதற்கான இடங்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனடிப்படையில் நேற்று ஆர்டிஓ முருகேசன் தலைமையிலான குழுவினர் அரசு போக்குவரத்து துறைக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது தாசில்தார் சந்திரன் உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் உட்பட அதிகாரிகள் சென்றிருந்தனர். இதுகுறித்து ஆர்டிஓ முருகேசன் கூறுகையில் இரண்டு இடங்கள் குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் எனவும் விரைவில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.