சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் இம்மாதம் 23ம் தேதி தொடங்க உள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2032ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் 2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், அதற்கடுத்த போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.