இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றுவதால் காவல் துறையினருக்கு மன அழுத்தம் அதிக அளவில் ஏற்படும் சூழல் தொடர்ந்து நீடித்து வந்தது. இதை கவனத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மன அழுத்தங்களை போக்கும் வகையில் யோகா பயிற்சி மற்றும் உளவியல் ரீதியிலான பயிற்சி போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் அனைவருக்கும் வாராந்திர ஓய்வு அளிக்கப்பட்டு அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறை மூலம் குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாராந்திர ஓய்வு பெறும் காவலர்கள் கட்டாயம் அதற்கு முன் ஐந்து நாள் பணி செய்திருக்க வேண்டும் எனவும், வாராந்திர ஓய்வுக்கு செல்லும் முன் தங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் வாராந்திர ஓய்வை நீட்டிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.