2030-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது. இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் இங்கிலாந்து, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது.
நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பூமியின் பாதுகாப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டு கால நிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் எதிர் நோக்குகையில் பசுமை தொழில்துறை புரட்சிக்கான ஒரு லட்சிய திட்டத்தை நான் வகுக்கிறேன். இது இங்கிலாந்தில் நாம் வாழும் முறையை மாற்றும். இது பகிரப்பட்ட உலகளாவிய சவால். உலகின் ஒவ்வொரு நாடும் நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்காக பூமியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.