16 மாநிலங்களில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் பலி

 

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி யானைகள் அதிகம் உயிரிழந்துள்ளதா ? என்றும் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனத்துறை அமைச்சர், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து யானைகள் உயிரிழப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும்; குறிப்பாக யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில், நீர் ஆதாரங்களை அதிகரித்தல், தீவன மரங்களை நடுதல் மற்றும் மூங்கில் காடுகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில வனத்துறைகளுடன் இணைந்து செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-2019ம் ஆண்டு வரை நாட்டில் தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் 600 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 117 யானைகளும், கர்நாடகா மாநிலத்தில் 116 யானைகளும், அசாம் மாநிலத்தில் 105 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் 70 யானைகள் மின்சாரம் தாக்கி மட்டும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!