அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு

 

 

அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உட்பட 3 பேர் மீது ஜே.ஜே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, தற்போது பா.ஜ.கவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவரது 2வது கணவர் ராமசாமி டெல்லி லோக் அதாலத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 13 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக ஆஜராகிவிட்டு காரில் தனது மகளுடன் சென்னை வந்ததாகவும், சென்னை ஜீவன் பீமா நகரிலுள்ள தனது வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது அமுதா என்பவர் கதவைத் திறந்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் உணவுப் பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தததாகவும், மது வாடை வீசியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள அவர், படுக்கை அறையில் தனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்ததாகவும், மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை புகார் மூலம் தெரிவித்திருந்தார். மேலும், இதனால் தான் அதிர்ச்சியடைந்து அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், அப்போது அந்த நபரும் அமுதா என்பவரும் தன்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தன்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த நபர்கள் மீதும், கணவன் என்ற முறையில் தனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த தனது மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெ.ஜெ நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது முன்னாள் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டல், முறையற்று தடுத்தல் மற்றும் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!