நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4.23 லட்சமாக குறைந்தது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 27,409 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,817 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 4,17,60,458 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் கொரோனாவுக்கு 347 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,09,358 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,23,127 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.82 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.19 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் 44,68,365 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 1,73,42,62,440 டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் கூடுதல் சலுகைகளை தங்களுடைய மாநிலத்தில் அறிவித்துள்ளன. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.