திரு.அய்யாக்கண்ணு, மாநில தலைவர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்க்காத உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தபோவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். அதற்காக ரயில் மூலம் இன்று காலை அவர் தலைமையிலான விவசாயிகள் 500பேர் டெல்லி செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவர் வீட்டிற்கு வந்த 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அய்யாக்கண்ணுவை வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது என்று வீட்டுக்காவலில் வைத்தனர். தகவலறிந்து இன்று காலை அவர் வீட்டிற்கு வந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் அவர் வீட்டின் முன்பு அரை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களை டெல்லி அனுமதிக்காததை கண்டித்து அய்யாக்கண்ணு வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறை துணை ஆணையர் வேதரத்தினம் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தார். அதனை தொடர்ந்து அவரங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.