ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் ஈஞ்சம்பாக்கதில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, அயனாவரம், நியூ ஆவடி சாலையில் கடந்த மாதம் 21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுண்டர் போலியானது என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர். போலீஸ் கமிஷனரின் பரிந்துரைப்படி இவ்வழக்கு விசாரணை டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் சிபிசிஐடிக்கு மாற்றபட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு விசாரணை துரித கதியில் நடந்து வருகிறது. சிபிசிஐடி போலீசார் இதுவரை
சென்னை, கீழ்ப்பாக்கம் உதவிக்கமிஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் நடராஜன் உட்பட 11 போலீசார் இரண்டு சாட்சியங்கள் என 13 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் சிபிசிஐடி அலுவலகத்தில் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா, அவரது மகன் மோகன் மற்றும் சங்கரின் அண்ணி உஷா ஆகிய 4 பேரும் ஆஜர் ஆகி சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தனர்.
அதன் பின்னர் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட சிபிசிஐடி தனிக்குழுவினர் சங்கரின் வீட்டிற்கு சென்று அங்கு சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சங்கர் என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணி, திலீப், தினகரன் ஆகிய மூவரிடமும் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் புழல் சிறையில் விசாரணை நடத்தினர். அங்கு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு நேற்று மீண்டும் புழல் சிறையில் திலீப்பிடம் மட்டும் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரனையின் போது சிறைச்சாலையின் ஜெயிலர் சீனிவாசலு உடனிருந்தார். திலீப்பிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக எழுதி திலீப்பிடம் கையப்பம் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து நாளை (இன்று) சங்கர் கேளம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிபிசிஐடி தரப்புதெரிவித்தது.