சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வந்த கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி சென்னை கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலைய எல்லையில் சுந்தர் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக சிஎம்பிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை, கீரத்துறையைச் சேர்ந்த சொரி என்கிற வேல்ராஜை (வயது 44) கைது செய்தனர். ஜாமினில் விடுதலையான வேல்ராஜ் மீண்டும் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.
கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்ததன் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். சிஎம்பிடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு முன்பாக அவருக்கு கோவிட் பரிசோதனை செய்வதற்காக தலைமைக்காவலர்கள் சரவணன், வண்ணமுத்து, ஆகியோர் கேஎம்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அப்போது வேல்ராஜ் நைசாக போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றார்.
இது தொடர்பாக தலைமைக்காவலர் சரவணன் கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பியோடிய கைதி வேல்ராஜை தேடி வருகின்றனர்.