வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை: பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில், ரூ.2,447 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஹண்டியா – ராஜதலாப் இடையிலான 6 வழிச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: சுதந்திரம் அடைந்ததில் இருந்து பார்க்காத பல திட்டங்களை வாரணாசி கண்டு வருகிறது. இங்கு, புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள்., சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அண்மையில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்குறுதி காகிதத்தில் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் பலனை நாம் வரும் நாட்களில் அனுபவிப்போம். ஆனால், எதிர்க்கட்சிகளோ வதந்திகளை பரப்பி விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக, பிரதமர் மோடி பேசினார்.

Translate »
error: Content is protected !!