15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர், பிஜேபி பிரமுகரைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிருபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமியை வறுமையின் காரணமாக அவரது பெரியம்மா மகள் ஷாகிதாபானு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். வண்ணாரப்பேட்டைக்கு அழைத்து வந்து சிறுமியை மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுமியை விபசாரத்தில் தள்ளியதாக ஷாகிதா பானு மற்றும் அவரது கணவர் மதன்குமார், அவரது சகோதரி சந்தியா மற்றும் விபசார புரோக்கர்கள் உள்பட மொத்தம் 18 பேரை போலீசார் முதற்கட்டமாக கைது செய்தனர்.
மேலும் விபசார புரோக்கர்கள் மூலம் சிறுமியை வண்ணராப்பேட்டையைச் சேர்ந்த பாஜ பிரமுகர் ராஜேந்திரன் தனது அலுவலகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தனது நண்பரான எண்ணுார் இன்ஸ்பெக்டர் புகழேந்தியையும் வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தத் தகவல்கள் போலீசாரின் விசாரணையில் வெளிவந்ததும் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபரான வினோபா ஜி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பட்டியலில் முக்கிய நபர்கள் குறித்து ஐந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனரோ அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால் பட்டியலில் உள்ள நபர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.