டெல்லி விவசாயிகளுக்காக டிச. 4ல் தமிழகத்தில் மறியல்: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் 4ம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஐ (எம்.எல்) என்.கே.நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்கூறியிருப்பதாவது:

“மத்திய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

வரலாற்றில் இல்லாத அளவு லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சென்று டெல்லியில் முகாமிட்டுள்ளனர். நியாயமான எழுச்சிமிக்க இந்த போராட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் ஆதரிப்பதோடு அவர்களோடு இணைந்து களத்தில் நின்று போராடி வருகின்றன.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துத் தீர்வு காண்பதற்கு மாறாக, மோடி அரசு விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கி பெருமுதலாளிகளிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிறு-குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தினை இழக்க வழிவகுக்கும் வகையிலும், கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் மாவட்ட, வட்ட, ஒன்றியத் தலைநகரங்களில் 2020 டிசம்பர் 4-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!