சென்னை
திருந்தி வாழ்வதாக கூறி விட்டு மீண்டும் கொள்ளையில் ஈடுபட்ட நீலாங்கரை கொள்ளையனுக்கு 357 நாட்கள் சிறையில் அடைக்க அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, நீலாங்கரை காவல் எல்லைப்பகுதிகளில் பிரபல கொள்ளையனாக வலம் வந்தவர் நாகராஜ் (வயது 27). 2019ம் ஆண்டு வீடு புகுந்து திருடியதற்காக 4 முறை சிறைக்கு சென்றவர் ஜாமினில் வெளியே வந்தார். அடிக்கடி திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் நாகராஜை அணுகிய நீலாங்கரை போலீசார் அவருக்கு அறிவுரைகள் கூறி திருந்திவாழும் படி ஊக்கப்படுத்தினர். அதற்கு அவர் சம்மதித்தார். அதனையடுத்து கடந்த மாதம் 18ம் தேதி நாகராஜை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் முன்பு ஆஜர்படுத்தினர்.
குற்ற விசாரணைமுறைச் சட்டம் 110 ன்படி தான் இனி 1 வருட காலத்தில் எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என தக்க நபர் சாட்சியங்கள் இருவர் முன்னிலையில் துணைக்கமிஷனரிடம் நாகராஜ் நன்னடத்தை பிணை உறுதிப்பத்திரத்தை அளித்தார். இந்நிலையில் நாகராஜ் மீண்டும் திருட்டில் ஈடுபட்டார். கடந்த 3ம் தேதி வெட்டுவாங்கேனியை சேர்ந்த நோயல் ஆண்டனி என்பவர் வீட்டில் கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். அதே பகுதி ராஜேந்திரா நகர் 2வது தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரின் பல்சர் பைக்கை நாகராஜ் திருடியுள்ளார். அது தொடர்பாக 4ம் நீலாங்கரை போலீசார் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருந்தி வாழ்வதாக உறுதிப்பத்திரம் அளித்தும் அதன்படி நடக்காமல் மீண்டும் மீண்டும் திருட்டுக்குற்றங்களில் ஈடுபட்டதால் நாகராஜ் நேற்று சிறையில் இருந்து மீண்டும் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். உறுதிப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு அதனை மீறினால் அந்த குற்றவாளியை மீண்டும் சிறையில் அடைக்க சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனருக்கு மாஜிஸ்திரேட்டின் அதிகாரம் உள்ளது. அதன்படி செயற்முறை நீதிமன்ற நடுவரான அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் நாகராஜை குமுவி சட்டம் 122 1(b) ன்படி அவர் நன்னடத்தையுடன் இருந்த காலமான 8 நாட்கள் போக மீதி 357 நாட்களும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி நாகராஜ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.