சென்னை
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்ற போலி விவசாயிகள் 52 பேர் மீது தமிழக சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாவது, ‘‘ ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ என்பது இந்திய அரசால் முழு நிதியுதவியுடன் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மூன்று ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6,000- நிதி உதவி வழங்கப்படுகிறது. திட்ட வழி காட்டுதல்களின்படி தகுதியான விவசாயிகள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் நிதி, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. இந்நிலையில் நிதிபெறத் தகுதியற்ற பல விவசாயிகள் அதிகாரிகள் மற்றும் வெளிநபர்கள் மூலம் ஏராளமான நபர்கள் சட்டவிரோத பதிவினை மோசடியாக செய்து பயனடைந்துள்ளதாக சிபிசிஐடிக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
2 எஸ்பிக்கள், 6 டிஎஸ்பிக்கள் 18 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மோசடி தொடர்பாக இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மோசடி தொடர்பாக அந்த துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டன. இந்தத் திட்டம் தொடர்பாக மோசடிகள் நடந்திருப்பது தொடர்பாக பொது மக்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்களுக்கு தெரிந்தால் அது குறித்து சிபிசிஐடிக்கு தாராளமாக தகவல் தெரிவிக்கலாம். அவர்களது பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
மேலும் சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு பொருத்தமான வெகுமதிகள் வழங்கப்படும். கீழ்கண்ட தொலைபேசி எண்/மின்னஞ்சல் முகவரி /அஞ்சல் முகவரியில் தகவல்கள் அளிக்கலாம். தொலைபேசி எண் – 044-2851 3500 மற்றும் பேக்ஸ் எண் 044 -2851 2510 வாட்ஸ்அப் எண் – 94981 81035 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் cbcid2020@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் Crime Branch CID, No. 220, Pantheon Road, Egmore, Chennai. Tamil Nadu – 600 008 என்ற முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம்’’. இவ்வாறு சிபிசிஐடி அறிவித்துள்ளது.