ரஜினி கட்சிக்கு மாநில நிர்வாகி தாவல்! தமிழக பாஜக கலக்கம்!!

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சிக்கு தங்களது கட்சி நிர்வாகிகள் தாவிவிடுவார்களோ என்று, தமிழக பாஜக கவலை கொண்டுள்ளது.

கடந்த 25 வருடங்களாக அதோ வருகிறேன்… இதோ வருகின்றேன் என்று போக்கு காட்டி வந்த நடிகர் ரஜினிகாந்த், ஒருவழியாக அரசியல் வருகையை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார். ஜனவரியில் புதிய கட்சி அறிவிப்பு என்ற தகவலை வெளியிட்ட உடனேயே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவருடன், பாஜக மூத்த நிர்வாகி அர்ஜுன் மூர்த்தி உடனிருந்தார். இதை பார்த்த தமிழக பாஜக தலைவர்கள் ஒருகணம் அதிர்ந்து போனார்கள். அடுத்த சில நிமிடங்களில், தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன்மூர்த்தி நியமிக்கப்படுவதாக ரஜினி அடுத்த அறிவிப்பை தந்தார்.

இதை பார்த்த பாஜக தலைவர்கள் குழம்பிப்போனார்கள். நமது கட்சியில் அறிவுஜீவிகள் பிரிவின் மாநிலத் தலைவரல்லவா; இவர் எப்போது பாஜகவை விட்டு ரஜினியுடன் கரம் கோர்த்தார் என்று குழம்பிப் போய், அவரது டிவிட்டர் பக்கத்தை பார்வையிட்டனர்; அப்போதுதான் தெரிந்தது, சில நிமிடங்களுக்கு முன் அர்ஜுன்மூர்த்தி தனது ட்விட்டர் பயோவை, தற்போது தலைவருடன் இருக்கிறேன் என Now with Thalaivar என்று மாற்றியது.

பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ரஜினி கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிட்ட அடுத்த கணமே தங்கள் கட்சியின் மாநில நிர்வாகி தாவிவிட்டாரே என்று, தமிழக பாஜக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. இதேபோல், மேலும் சில பாஜக முக்கிய நிர்வாகிகள் நடிகர் ரஜினியுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிந்திருப்பது, பாஜக வட்டாரங்களை கவலை அடையச் செய்துள்ளது.

Translate »
error: Content is protected !!