கொரோனா தடுப்புப் பணியில் முன்களப்பணியாளர்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்று நடித்துள்ள “ சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் சிடியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார்.
தமிழககத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரை பாராட்டும் வகையில் ‘ஸலாம் சென்னை’ என்ற பெயரில் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்ற இப்படத்தை Happy Unicorn என்ற நிறுவனம் தயாரிக்க Think Music என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வுகூடத்தில் இதன் வெளியீட்டு விழா நடந்தது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இப்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார். ஏற்கனவே Happy Unicorn நிறுவனம் சென்னை பெருநகர காவல் துறையினருடன் இணைந்து தயாரித்த “மூன்றாம் கண்” சி.சி.டி.வி கேமரா பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம், பெண்காவலர்களின் சேவையை பாராட்டி பெண்கள் தினத்தன்று Womens Day என்ற பெயரில் குறும்படம் தயாரித்து வெளியிட்டனர். அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தென்சென்னை கூடுதல் கமிஷனர் தினகரன், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன், மத்தியக்குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மற்றும் கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர், தலைமையிட இணைக்கமிஷனர் மல்லிகா, தமிழக சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.