ஆன்லைனில் மோசடி ஆசாமிகளால் பறிபோன பணம் ரூ. 54 ஆயிரத்தை இழந்தவருக்கு கீழ்பாக்கம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியால் வங்கியிலிருந்து அந்த மீண்டும் பெற்றுத்தந்தனர்.
சென்னை, சூளை, சட்டண்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 68). இவர் ஐசிஐசிஐ வங்கியின் கிரடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கிரடிட் கார்டு ரகசிய குறியீட்டு எண்ணை தவறாக உள்ளீடு செய்தது காரணமாக பிளாக் செய்யப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியன் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதியன்று இணையதளம் மூலம் தேடி, வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், பாலசுப்பிரமணியத்தின் கிரடிட் கார்டு விபரங்களை கேட்டுள்ளார். இதனை நம்பிய பாலசுப்பிரமணியன் தனது கிரடிட் கார்டு விபரங்களை கொடுத்துள்ளார். மேலும் ஓடிபி எண்ணையும் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியத்தின் கிரடிட் கார்டிலிருந்து ரூ. 54 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் இதுகுறித்து சமீபத்தில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிமுகப்படுத்திய சைபர்கிரைம் பிரிவான கீழ்ப்பாக்கம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனர் அதீவீரபாண்டியன் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் சைபர்கிரைம் போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் அடையாளம் தெரியாத நபர் பாலசுப்பிரமணியத்தின் கிரடிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கிக்கு போலீசார் விதிகளுக்குட்பட்டு அந்த பணத்தை திரும்பச் செலுத்தும்படி பரிந்துரை கடிதம் அனுப்பினர்.அதன்பேரில் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தினர், பாலசுப்பிரமணியன் வங்கி கணக்கிற்கு ரூ. 54000 பணத்தை திரும்ப செலுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த பாலசுப்பிரமணியன் சென்னை நகர சைபர் குற்றப்பிரிவு கீழ்பாக்கம் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.