சென்னை வடபழனியில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக காவலரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை, முகப்பேரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வடபழனி 200 அடி சாலை நெடும்பாதை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகாக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார். பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் ‘பேருந்து வர லேட் ஆகும். எனவே என்னுடன் பைக்கில் வா’ என கூறியுள்ளார். அதற்கு ‘‘உங்களை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. நான் வரவில்லை நீங்கள் போகலாம்’’ என கூறியுள்ளார்.
ஆனால் போலீஸ் கான்ஸ்டபிள் குடி போதையில் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் ஓடி வந்து போதையில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிளை அடித்து உதைத்தனர்.
தர்மஅடி வாங்கிய கான்ஸ்டபிள் குடிபோதையில் அதனை தடுக்க முடியாமல் திணறியுள்ளார்.
இதுதொடர்பாக பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த போலீஸ் கான்ஸ்டபிளை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். விசாரணையில் அந்த கான்ஸ்டபிள் சென்னை எம்ஜிஆர் நகர் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ராஜு என்பதும் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. உச்சகட்ட போதையில் இருந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திநகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் நேரடி விசாரணை நடத்தினார்.
அதனையடுத்து பெண்ணை மானபங்கப்படுத்திய காவலர் ராஜ் மீது வடபழனி போலீசார் 294 பி (தரக்குறைவாக திட்டுதல்), 323 (தாக்குதல்) மற்றும் பெண்களுக்கெதிரான வன் கொடுமைச்சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.