சென்னை, வில்லிவாக்கத்தில் கார் மோதி கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் தோழி மற்றும் அவரது கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியைச் சேர்ந்தவர் கவுசிபி (26). இவரது கணவர் அசாரூதின். அதே பகுதியில் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். 4 மாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுக்க சென்று விட்டு திரும்பிய போது கார்மோதி பலியானார். விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் ஓடிவிட்டார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது என்று சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டி வந்த பெண் கொளத்துாரைச் சேர்ந்த ரூபாவதி என்பது தெரியவந்தது. இவர் வருமானவரித்துறை அதிகாரி ஒருவரின் தோழி ஆவார். தினமும் ரூபாவதியின் வீட்டிற்கு வருமானவரித்துறை அதிகாரி காரை அனுப்பி சாப்பாடு வாங்கி வர சொல்வது வழக்கம். அதைப்போல தான் நேற்றும் கார் ஓட்டுனர் அரவிந்த் என்பவர் காரில் ரூபாவதி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிறகு ரூபாவதி தனக்கும் கார் ஓட்டத்தெரியும். நான் ஓட்டுகிறேன் என்று கூறி அரவிந்திடமிருந்து காரை வாங்கி ஓட்டி உள்ளார். காருக்குள் அரவிந்த்தும் அமர்ந்துள்ளார். பிறகு அதிவேகமாக காரை ஓட்டி கர்ப்பிணி பெண் மீது மோதி உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ரூபாவதியிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. இதையடுத்து ரூபாவதி, கார் ஓட்டுனர் அரவிந்த் ஆகியோரை திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இருவர் மீதும் 279- (அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்), 304(ஏ)- (அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல்), 304 (2) -கொலை குற்றம் ஆகாத மரணத்தை விளைவித்தல், 109- குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.