சென்னை நகர காவல்துறையில் கொரோனா தடுப்புப் பணியில் முன் களப்பணியாளர்களாக நின்று சென்னை நகர காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் இதுவரை சென்னை நகர
காவல்துறையில் மொத்தம் 3,165 பேர் கொரோனா நோயால் பாதிப்படைந்தனர். அதில் 3,097 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி விட்டனர். அவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் தனிமைப்படுத்தும் முகாம் ஏற்படுத்தப்பட்டு அதில் அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர் கொரோனாவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிப்படைந்தார். பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைகள் முடிந்து நேற்று பணிக்கு திரும்பினார். இணைக்கமிஷனர் சுதாகர் உள்பட மொத்தம் 25 காவல் ஆளிநர்கள் நேற்று கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பினார்.
அவர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பூங்கொத்து கொடுத்து வரவேற்று நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அப்போது இணைக்கமிஷனர் சுதாகர் பேசியதாவது, ‘‘மற்ற நோய்களால் பாதிக்கப்படும் போது உடல் அளவில்தான் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் கொரோனாவால் பாதிப்படையும் போது தனிமைப்படுத்தலில் இருப்பது என்பது அவசியமான ஒன்று. அந்த தனிமையை அனுபவிப்பது என்பது கடினமான விஷயம்தான். அது மிக சவாலாக இருந்தாலும் அவற்றை எதிர்கொள்ளத்தேவையான தைரியத்தையும், ஊக்கத்தையும், மன தைரியத்தையும் எனது உயரதிகாரிகள் அளித்தனர். முக்கியமாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் என்னிடம் தினமும் செல்போனில் பேசி நலம் விசாரித்தார். மேலும் என்னையும் எனது குடும்பத்தையும் நல்ல முறையில் கவனித்து எங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளை செய்து தந்தார்கள். அதற்கான நான் கமிஷனருக்கும், மைலாப்பூர் துணைக்கமிஷனர் சஷாங்சாய், திருவல்லிக்கேணி உதவிக்கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசுகையில், ‘‘கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த உங்கள் அனைவரையும் பாராட்டி வரவேற்கிறேன். கொரோனா வரும் என்ற அச்ச உணர்வு இருந்தும் தியாக மனப்பான்மையுடனும், மக்கள் சேவையில் மகத்தான பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் கபசுர குடிநீரை கமிஷனர் தனது கையால் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தினகரன், கண்ணன், அருண் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.