சென்னையில் புதிதாக துவங்கப்பட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசார் மீட்டுக் கொடுத்த ரூ. 49 ஆயிரம்

ஏடிஎம் கார்டில் இருந்து ஆன்லைன் மோசடி நபர்களால் திருடப்பட்ட ரூ. 49 ஆயிரம் பணத்தை, சென்னை அம்பத்துார், வண்ணாரப்பேட்டை சைபர்கிரைம் போலீசார் மீட்டுக் கொடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சென்னை நகர மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் துருவி சன்யாசி ராவ் (51). கடந்த வாரம் தனது செல்போனில் இணையதளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் சேவை மையம் குறித்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் சேவை போல அதில் ஒரு அறிவிப்பு வந்தது. அதில் சன்யாசி ராவுக்கு உதவுவதாக கூறி Team viewer Quick support app என்ற இணைப்பு ஸ்கிரீனில் வந்துள்ளது. அதனை கிளிக் செய்து சன்யாசி ராவ் உள்ளே சென்றார். அப்போது அவரது ஆதார் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை அந்த இணைப்பில் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது. சன்யாசியும் அதனை உள்ளீடு செய்துள்ளார். சில நிமிடங்களில் துருவி சன்யாசிராவுக்கு அவரது சிட்டி பேங்க் கிரெடிட் காரிடிலிருந்து ரூ. 39,998 பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கியில் போய் விசாரித்த போது அது மோசடி ஆப் என தெரியவந்தது. இது தொடர்பாக அவர் அம்பத்தூர் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அம்பத்துார் துணைக்கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் அது குறித்து விசாரணை நடத்தியதில் சன்யாசிராவ் அளித்த புகார் உண்மையென தெரியவந்தது. அதனையடுத்து பணப்பரிவர்த்தனை நடந்த சிட்டி வங்கிக்கு, தொடர்பு கொண்ட சைபர்கிரைம் போலீசார் சன்யாசிராவின் அனுமதியின்றி முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் எனவும் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதனையடுத்து சிட்டி வங்கி நிர்வாகம் புகார்தாரர் சன்யாசிராவவின் வங்கி கணக்கிற்கு, ரூ.19,999 பணத்தை திரும்பச்- செலுத்தினர்.

சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கியின் கிரெடிட் கார்டிலிருந்து இந்திய மதிப்பில் ரூ.10,661 மதிப்புள்ள யூரோ டாலர்கள் எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுந்தகவல் வந்தது. அது தொடர்பாக செல்வராஜ் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமியிடம் புகார் அளித்தார்.
வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவு போலீசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் செல்வராஜின் கிரெடிட் கார்டிலிருந்து ஆஸ்திரேலியா, மெல்போர்னிலிருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவு போலீசார் பணபரிவர்த்தனை நடந்த ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு, தொடர்பு கொண்டு மோசடி தொடர்பாக தெரிவித்தனர். அதனை ஏற்ற வங்கி நிர்வாகம் செல்வராஜின் வங்கி கணக்கிற்கு, மோசடி செய்யப்பட்ட பணம் 10,661 ரூபாயை செலுத்தினர்.

சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் புதிதாக தொடங்கப்பட்ட சைபர் கிரைம் பிரிவு சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கி பொதுமக்கள் அளிக்கும் புகார்களில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த சைபர்கிரைம் குற்றப்பிரிவு பணமோசடி செய்யும் புகார்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவது சென்னை நகர மக்களிடையே பாராட்ட வைத்துள்ளது.

Translate »
error: Content is protected !!