எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரசார நிகழ்ச்சியை தற்போதை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்றுமுன்தினம் மதுரையில் தொடங்கினார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் 2-வது நாளான நேற்று கமல்ஹாசன் தேனியில் தனது பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று அவர் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், தான் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கமல்ஹாசனுக்கு முன்னாள் முதல்மந்திரியும் நடிகருமான எம்.ஜி.ஆர் மாலை அணிவிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது டுவிட்டரில் அந்த வீடியோவுடன் இணைத்து கமல்ஹாசன் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ’புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். எதுவும்_தடையல்ல’ என தெரிவித்துள்ளார்.