‘‘இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும்’’ * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேச்சு

‘‘இளஞ்சிறார்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தை காக்கும் பாதுகாவலர்களாகவும், சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும்’’ என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசினார்.


சென்னை நகரில் குற்ற வழக்குகளால் பாதிப்படைந்ததாக கண்டறியப்படும் சிறுவர்களை மீட்டு நல்வழிப்படுத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை நகர காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை நகர காவல்துறை இணைந்து இளஞ்சிறார்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கான சுய தொழில் பயிற்சி மற்றும் திறன் பயிற்சிக்கான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர். நேற்று கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் 47 வழக்குகளில் அறியப்பட்ட இளஞ்சிறார்கள் காவல்துறை ஏற்பாட்டின் பேரில் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், ‘‘இளஞ்சிறார்கள் வருங்கால சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும். குற்றம், மறந்து, சுற்றம் அறிந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும். காவல்துறை மூலம் வழங்கப்படும் இந்த தொழில்நெறி பயிற்சி அதற்கு உதவும். மேலும் சமுதாய வளர்ச்சியில் தமிழக அரசும், காவல்துறையும் எடுக்கும் இந்த முயற்சி பல இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும்’’ என்று இளஞ்சிறார்களை வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் பாபு, அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!