சென்னை அடையாறில் அரிவாளுடன் சுற்றிய வழிப்பறி கொள்ளையர்கள் மூவரை இரவு ரோந்தின் போது அடையாறு போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னை, அடையாறு குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தலைமைக்காவலர்கள் தயாளன், ஸ்டாலின் ஜோஸ், ஸ்ரீதர் ஆகியோர் நேற்று இரவு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது அடையாறு பகுதியில் டியோ மஞ்சள் நிற இருசக்கரவாகனத்தில் 3 அடி நீள பட்டாக்கத்தியுடன் 3 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் ரோந்து போலீசார் அவர்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்தனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் அடையாறு இந்திரா நகர், கெனால் பேங்க் ரோட்டில் போலீஸ் ரோந்து வாகனம் வந்த போது அதனை முந்திக்கொண்டு மஞ்சள் நிற டியோ பைக்கில் மூவர் வேகமாகச் சென்றனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பின்தொடர்ந்த போது பைக் ஆசாமிகள் பைக்கை வேகமாக செலுத்தி தப்பியோடினர். இதனால் உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச் சென்ற போது அவர்கள் மூவரும் பைக்கை இந்திரா நகரில் ஒரு இடத்தில் விட்டு அங்குள்ள குடியிருப்புப்பகுதிக்குள் சென்று இருளில் மறைந்தனர். போலீசார் அந்த பகுதியை நாலாப்பக்கமும் சுற்றி வளைத்தனர். சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஓரு வீட்டின் சந்துக்குள் பதுங்கியிருந்த 3 பேரையும் அதிகாலை 5.30 மணியளவில் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இதில் அடையாறு எழில்நகரைச் சேர்ந்த கபீர்சிங் (வயது 33), கண்ணகிநகரைச் சேர்ந்த சதீஷ் (22), விக்னேஷ் (வயது 20) என தெரியவந்துது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். அடையாறு எழில் நகரில் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த டியோ வண்டியின் பூட்டை உடைத்து மூவரும் திருடியுள்ளனர். அந்த வாகனத்தில் சென்று பொது மக்களிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து வாகனத்தையும், அரிவாளையும் கைப்பற்றிய போலீசார் மூவரையும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இரவு ரோந்தில் விழிப்புடன் செயல்பட்டு ரோந்து அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி ஒருங்கிணைத்து குற்றம் நிகழ்வதற்கு முன்னரே தப்பிச்சென்ற குற்றவாளியை சுற்றி வளைத்த இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.