BYJU’S என்ற இணைய வழிக்கல்வி செயலியை கட்டணமில்லாமல் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் 1,600 குழந்தைகளின் பயன்பாட்டிற்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.
சென்னை நகரில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக, சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். காவல் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லுாரிகளில் இடம் கிடைக்க செய்யவும் வழிவகை செய்துள்ளார். இதன்தொடர்ச்சியாக காவல் குடும்பங்களைச் சேர்ந்த 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொழிற்படிப்புக்கான கல்விக்கு ஆயத்தமாகும் வகையில் ‘BYJU’S என்ற இணைய வழி கல்வி பயிலும் செல்போன் செயலியை கட்டணமின்றி வழங்க தீவிர முயற்சி கொள்ளப்பட்டது. அதன்பேரில், அந்த செல்போன் செயலி நிறுவனமும், கொரோனா பணியில் முன்கள வீரர்களான காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு இச்சேவையை கட்டணமின்றி வழங்க முன்வந்தது.
அதன்படி ‘BYJU’S வகுப்புகள் கணிதம், அறிவியல், ஆங்கிலம் படிப்புகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மாதம் ரூ. 6 ஆயிரம் மதிப்புடைய கல்வி செயலியை 1,600 காவலர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பு பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பேரில் இன்று (21.12.2020) காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 1,600 பேருக்கு BYJU’S செல்போன் செயலியை வழங்கும் அடையாளமாக, 30 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் BYJU’S செல்போன் செயலி நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆதேஷ் சிங் சட்டா, உதவி துணைத்தலைவர் சரத் மற்றும் சென்னை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், கட்டுப்பாட்டு அறை துணைக்கமிஷனர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.