120 நாட்களில் ரூ. 1.26 கோடி மீட்பு: சென்னை சைபர்கிரைம் அதிரடி

கடந்த 120 நாட்களில் ஆன்லைனில் பறிபோன ரூ. 1.26 கோடியை மீட்டு சென்னை சைபர்கிரைம் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை நகரில் கொரோனா லாக்டவுன் தொடங்கியதில் இருந்து ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. லோன் பெற்றுத்தருவதாகவும், வேலை வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தைகள் காட்டி ஆதார்கார்டு, ஓடிபி விவரங்களை பெற்று பலே ஆசாமிகள் திரைக்கு வராமலேயே ஆன்லைன் மூலம் பணத்தை அபகரித்துக் கொண்டு பறந்து விடுகின்றனர். இது போன்ற சைபர் கிரைம் குற்றங்களை களையவும் அவர்களை கண்டறிந்து பணத்தை மீட்பதற்காகவும் சென்னை நகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சைபர்கிரைம் தனிப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் அந்தந்த துணைக்கமிஷனர்கள் நேரடி மேற்பார்வையில் இந்த பிரிவு இயங்கி வருகிறது. ஆன்லைன் மோசடி மூலம் இழந்த பணத்தை சட்டரீதியாக அணுகி சைபர்கிரைம் பிரிவு போலீசார் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நகரில் கடந்த 4 மாதங்களில் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் ரூ. 31 லட்சம் மீட்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை புனித தாமஸ்மலை காவல் மாவட்டத்தில் ரூ. 26 லட்சமும், தி.நகர் காவல் மாவட்டத்தில் ரூ. 11.50 லட்சமும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 1,200 சைபர் குற்றங்கள் சம்மந்தமான புகார்கள் சென்னையில் 12 சைபர்கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்டுள்ளது. அதில் 657 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!