தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமீபத்தில் பல்வேறு இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடன் தருவதாக ஆன்லைன் ஆப் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வரும் செயலிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை அறிவுரைகளாக வழங்கியுள்ளனர்.
அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
1) கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன்களுமே (Loan Apps) ரிசர்வ் வங்கியால் NBFC (Non Banking Financial Company) ஆக பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த Loan App-களின் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள்.
2) இந்த அப்ளிகேஷன்கள் (Loan Apps) உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லா தகவல்களையும் சேகரித்து, உபயோகிப்பவர்களின் (பொதுமக்கள்) தனியுரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன.
3) கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை (Loan Apps) பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4) பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதார் அல்லது வங்கி விவரங்களை மேற்படி பதிவு பெறாத, முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்களில் (Loan Apps) கொடுக்க வேண்டாம்.
5) உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள், புகைப்படங்கள், கேமரா, இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த பணக்கடன் வழங்குநர்களால் சமரசம் செய்யப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
6)உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் அழைப்புகள் வந்தால் காவல்துறையில் புகார் கொடுங்கள்.
7)இந்த அப்ளிகேஷன்களில் (Loan Apps) உள்ள தொடர்பு விவரங்கள், குறை தீர்க்கும் அதிகாரியின் பெயர்கள் மோசடியானவை.
8)ஒரு NBFC (Non Banking Finacial Company) இன் உண்மையான தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் சரிபார்க்கவும்.