அரசு ஆஸ்பத்திரியில் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறை ; ஆய்வில் கண்டுபிடித்த கலெக்டர்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறையில் இருந்ததை அதிரடி ஆய்வில் கலெக்டர் கண்டுபிடித்தார். புத்தாண்டில் இருந்தாவது திருந்துங்கள் எனவும் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இது மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து நவீன மருத்துவ வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு உள்ளதுஇந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தங்களின் ஆஸ்பத்திரிகளுக்கு புரோக்கர்கள் மூலம் சில டாக்டர்கள் அழைத்து செல்வதாகவும்,

அறுவை சிகிச்சையை தாமதம் செய்வதோடு, பல்வேறு காரணங்களை கூறி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்வதாகவும், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியானது புரோக்கர்களின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதற்கு ஆஸ்பத்திரியில் உள்ள சில தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோர் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன. சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை அழைத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வராமல் தன்னிச்சையாக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து ஆதாரங்களுடன் புகார்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று காலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 7 டாக்டர்கள் விடுமுறையில் சென்றிருப்பதாக கூறப்பட்டது.

ஒரு டாக்டர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதும், இதன்காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவலமும் ஏற்பட்டிருப்பதை கலெக்டர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 8 பேரில் 7 பேருக்கு விடுமுறை கொடுத்தது ஏன்? ஒருவர் எவ்வாறு அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியும்? என்று விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணை அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பின்னர் தூய்மை பணியாளர்களையும் அழைத்து விசாரித்து எச்சரித்தார். புகார்களுக்கு ஆஸ்பத்திரி பணியாளர்கள் யாருக்காவது தொடர்பு இருப்பதாக தெரியவந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

அரசு ஆஸ்பத்திரி வேலையே வேண்டாம், இந்த வேலையை விட்டுவிடலாம், கிளினிக் நடத்திக்கொள்ளலாம் என தப்பித்து செல்லலாம் என நினைத்தால், அதற்கும் வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள். இன்றோடு 2020-ம் ஆண்டு முடிகிறது. புத்தாண்டில் இருந்தாவது அனைவரும் திருந்தி, தங்கள் பணியை ஒழுங்காக செய்யுங்கள்.

உங்களின் வேலையை நீங்கள் சரியாக செய்தால் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார். கலெக்டரின் இந்த அதிரடி ஆய்வு மற்றும் கடுமையான எச்சரிக்கை காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர் ஜவகர்லால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!