‘‘எனது கவுரவத்தை மீட்டுக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி’’ – பிரிவு உபசார விழாவில் டிஜிபி ஜாபர்சேட் உருக்கமான உரை

‘‘காவல்துறையில் பல சோதனைகளை சந்தித்த எனக்கு, நான் இழந்த பெருமையை, என் கவுரவத்தை மீட்டுக் கொடுத்து, எனக்கு காவல்துறை மரியாதையுடன் பிரிவு உபசார விழா நடத்துவதற்கு உத்தரவிட்ட மாமனிதர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பணியில் இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர்சேட் பேசினார்.

1986ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல்துறையில் சேர்ந்தவர் ஜாபர்சேட். சில மாதங்களுக்கு முன்பு தீயணைப்பு துறை இயக்குனராக மாற்றப்பட்டு பணிபுரிந்து வந்தார். நேற்றுடன் ஓய்வு பெற்ற ஜாபர்சேட்டிற்கு பிரிவு உபசார விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. இவ்விழாவில் தமிழக டிஜிபி திரிபாதி, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். டிஜிபி திரிபாதி, ஜாபர்சேட்டுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

 

இந்த விழாவில் டிஜிபி ஜாபர்சேட் பேசிய போது ‘‘35 ஆண்டுகளில் நான் காணாத உயரம் இல்லை. அடையாத வீழ்ச்சிகள் இல்லை, வீழ்ந்த போது தாங்கி பிடித்த காவல்துறை நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஐந்தரை ஆண்டுகள் மண்டபத்திற்கு மாற்றப்பட்டு பணிபுரிந்த போது எனக்கு ஆதரவு அளித்த எனது நண்பர்களுக்கும் நன்றி. நியாயமற்ற காழ்ப்புணர்ச்சிகளுக்கு மத்தியில் பணியில் இருக்கும் சூழல் நடு நிலைமையை பெறுவது முடியாத ஒன்று. வீழ்வது தோல்வியாகி விடாது, வீழ்ந்த பின்பு எழ மறுப்பதே தோல்வி. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நடுங்காத நெஞ்சுரத்துடன் அதனை எதிர்த்து முன்னேறுவதைத்தான் நம் வாழ்க்கை செய்தி சொல்லவேண்டும். காவல்துறையில் பல சோதனைகளை சந்தித்த எனக்கு, நான் இழந்த பெருமையை, என் கவுரவத்தை மீட்டுக் கொடுத்து, எனக்கு காவல்துறை மரியாதையுடன் பிரிவு உபசார விழா நடத்துவதற்கு ஆணையிட்ட மாமனிதர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ இவ்வாறு அவர் பேசினார்.

 

Translate »
error: Content is protected !!