நீட் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவியின் தந்தை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நடந்த நீட் தேர்வு கலந்தாய்வில் கடந்த மாதம் 7ம் தேதி ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த மாணவி தீக்சா (வயது 18), தனது தந்தை பாலச்சந்திரனுடன் அந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார். நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற தீக்சா 610 மதிப்பெண் பெற்ற ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டார். அவர் சமர்ப்பித்த சான்றிதழ் போலி என்று தெரிய வந்ததும் அது தொடர்பாக மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் சென்னை பெரியமேடு போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும், மாணவியும் அவருடைய தந்தையும் காவல் நிலையத்தில் ஆஜராக வில்லை. இதனால் அவர்களை கைது செய்ய கோர்ட் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 15 நாட்களாக தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில்
இன்று மாணவியின் தந்தை பாலச்சந்திரனை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். அவர் பெரியமேடு போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு சென்னை எழும்பூர் 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.